தேர்தலை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் விஷ்ணு பேட்டி

 


நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல், 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், வேட்புமனு பரிசீலனை 20-ம் தேதி, வேட்புமனுக்களை திரும்பப் பெற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ளது.

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு, திருநெல்வேலி உதவி ஆட்சியர், அம்பை தொகுதிக்கு சேர்மாதேவி சார் ஆட்சியர், பாளை தொகுதிக்கு மாநகராட்சி ஆணையர், நாங்குநேரி தொகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், ராதாபுரம் தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

5 சட்டமன்ற தொகுதிக்கு 3319 பேலட் யூனிட்டும், 2506 கண்ட்ரோல் யூனிட்டும், விவிபேட் 2653 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் நெல்லை தொகுதியில் 408 வாக்குச்சாவடிகளும், அம்பை தொகுதியில் 356 வாக்குச் சாவடிகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 389 வாக்குச் சாவடிகளும், நாங்குநேரி தொகுதியின் 395 வாக்குச் சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 376 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1924 வாக்குச்சாவடிகள் ஆகும். இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 159 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்களை கண்டறியும் பொருட்டு வாகன சோதனை தணிக்கை செய்யவும் 15 பறக்கும்படை குழுக்களும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 10 இதர கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை மீறல் தொடர்பாக பொதுமக்கள் 1800 425 8373 -ம், 1950 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மாவட்டத்தில் 316 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் 88 வாக்குச் சாவடிகளும் அம்பை தொகுதியில் 49 வாக்குச் சாவடிகளும் பாளையங்கோட்டை தொகுதியில் 109 வாக்குச் சாவடிகளும் நாங்குநேரி தொகுதியில் 49 வாக்குச் சாவடிகளும் ராதாபுரம் தொகுதியில் 21 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 316 பூத்துகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடின்றி தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலை சுமுகமாக நல்ல முறையில் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)