அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா செல்ல இருக்கும் தேதி அறிவிக்கப்பட்டால், அதிமுக தலைமை அலுவலகத்தையும் மூடிவிடுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 


சசிகலா தமிழகம் வருகிறார் என்றதும் ஜெயலலிதா சமாதியை மூடுபவர்கள், நாளை அதிமுக தலைமை கழகம் செல்லும் செய்தி கிடைத்தால் தலைமையகத்தையே மூடுவார்களா என நமது எம்.ஜி.ஆர் நாளேடு கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டுள்ளது.


சசிகலா பெங்களூருவில் இருந்து 7ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று அறிவித்தார். அத்துடன், வழிநெடுக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வரவேற்பு கொடுப்பதற்கும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சசிகலா விடுதலை ஆன நாளில் இருந்தே அவருக்கு, பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய போஸ்டர்களை ஒட்டிய அதிமுக நிரிவாகிகளை கட்சியில் இருந்து நீக்கி, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தினகரன்,  ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வார் என்பதால், அதனை அரசு மூடியிருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா செல்ல இருக்கும் தேதி அறிவிக்கப்பட்டால், அதிமுக தலைமை அலுவலகத்தையும் மூடிவிடுவார்களா என அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாகிய நமது எம்.ஜி.ஆர் கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், சென்னை திரும்பும் சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கருதப்படுகின்றது

சசிகலா விடுதலை ஆன நாள் முதலே தமிழக அரசியல் களம் கூடுதல் பரபரபபை சந்தித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.