அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலாவால் தொடரப்பட்ட வழக்கு தூசி தட்டப்படுகிறது: அதிமுகவுக்கு நெருக்கடி?.

 


2017 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்கள். அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அவர்கள் பதவியில் தொடர தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.

பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் மூன்று வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கி கணக்குகளை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கு வழங்கினர்.

இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இந்த சூழலில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் நடவடிக்கையில் ஈடுபட போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டால் அதிமுகவுக்கு நெருக்கடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் இறுதித் தீர்ப்பு வரும் வரை சசிகலாதான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என அவரது தரப்பில் கூறி வருகின்றனர்.