எஸ்.ஐ மகன் நேசராஜை கொன்ற இரும்புக்கரம் எது ? சொத்துக்காக விபரீதம்
சென்னையில் சொத்து தொடர்பான பிரச்சனையை பேசி தீர்க்க முயன்ற போது உருவான கைகலப்பில் இளைய மகனை, ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரும், அவரது மற்றொரு மகனும் சேர்ந்து அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சின்னமலை வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வேதநாயகம். இவருக்கு சத்தியராஜ், பாக்யராஜ் மற்றும் நேசராஜ் என மூன்று மகன்கள், அவர்களது குடும்பத்துடன் தனித்தனியாக ஒவ்வொரு தளத்திலும் வசித்து வந்தனர்.
வேதநாயகத்திற்கு சொந்தமாக தேனியில் இடம் ஒன்று உள்ளது. அந்த இடம் தொடர்பாக குடும்பத்தில் கடந்த சில மாதங்களாக சண்டை நீடித்து வந்தது. இதில், இரண்டாவது மகனான பாக்யராஜ் என்பவருக்கும் மூன்றாவது மகனான நேசராஜ் பகை வலுத்து வந்துள்ளது. இந்த நிலையில் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என நேசராஜ் தனது தந்தை வேதநாயகத்துடன் தனது அண்ணன் பாக்யராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பாக்யராஜ், நேசராஜை தாக்கியதாகவும், உடன் வேதநாயகமும் சேர்ந்து கொண்டு நேசராஜை தாக்கியதில் கிரில் கம்பியிலான கேட்டில் மோதி கீழே விழுந்ததில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகின்றது.
பிரச்சனையை பேசி தீர்த்து வைக்க வந்திருந்த நேசராஜின் மனைவி குணசெல்வராணியும் அவரது உறவினர்களும் நேசராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நேசராஜ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேசராஜின் மனைவி குணசெல்வராணி அவரது உறவினர்கள், தனது மாமனார் ஓய்வு பெற்ற எஸ்.ஐ வேதநாயகத்தையும், பாக்யராஜையும் கைது செய்ய கோரி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்திருப்பதாக கூறியதை அடுத்து போரட்டத்தை கைவிட்டனர். கொலை செய்யப்பட்ட நேசராஜ் டேட்டா க்ளவுடு டெக்னாலாஜி என்ற பெயரில் தனியார் தொலை தொடர்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
தேனியில் உள்ள நிலத்தில் தனியாக வீடு கட்டிக் கொள்வதற்கு வேதநாயகம் தனது மூன்று மகன்களிடமும் தலா 5 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், இதில் நேசராஜ் மட்டும் தந்தைக்கு பணம் தராததாலும் தேனியில் உள்ள சொத்தை கேட்டு நேசராஜ் பிரச்சனை செய்து வந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக உறவினர்கள் சுட்டிக்காட்டினாலும், உணர்ச்சி வேகத்தில் தந்தை மகன்களுக்கு இடையே நடந்த தள்ளுமுள்ளு கொலை என்ற விபரீதத்தில் முடிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சொத்துக்களுக்காக கண்மூடித்தனமாக சொந்தங்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டால் இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்..!