“அமர்ந்த இடத்திலேயே அகிலத்தையும் அறியக்கூடியது நூல்தான்” என்றார் அறிவுக்களஞ்சியம் அண்ணா
அண்ணா ஓர் அறிவுக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது! அந்தளவிற்கு அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார்.
உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களான கிரேக்கத்தைச் சேர்ந்த டோமஸ்தெனி, இங்கிலாந்தின் எட்மண்ட் பர்க், அமெரிக்காவின் ராபர்ட் கிரின், இங்கர்சால், வில்லியம் ஷேக்ஸ்பிரியர், ஜார்ஜ் பெர்னாட்ஷா , மில்டன், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பி பார்க்க வைத்தார், அவரது அறிவார்ந்த பேச்சால் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டார், முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா.
பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிறேன் என்றார், அண்ணா.
அவர் தன் வசீகர பேச்சால் பகுத்தறிவை பாமரனுக்குள் ஊட்டினார் ; 40ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை நாடெங்கும் எதிரொலித்தன. குறிப்பாக சொல்வதென்றால், காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் ஆண்ட நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே தன் வசீகரப் பேச்சால் நாடாளுமன்றத்தையே குலைநடுங்க வைத்தார் அண்ணா.
பெருவாரியாக பேசும் இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று முன்னாள் பிரதமர் நேரு கேட்டபோது,
அப்ப அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக ஆக்காமல் மயிலை ஆக்கியது ஏன் என்று அண்ணா பதிலுரைத்தார்.