மாவட்ட நீதிமன்றங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு; உயர்நீதிமன்றம் உத்தரவு..

 


தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பய மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்தக்கோரி கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப்பானர்ஜி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்றத் துறைகளில் படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, பிற அரசு துறைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அமலில் உள்ளது.

இதேபோல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.