கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய செவிலியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்
கரூரில், கர்ப்பிணி பெண்ணிடம் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் பணம் பெற்றுத் தர ரூ 2,000 லஞ்சம் வாங்கிய கிராம சுகாதார செவிலியரை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கையும் , களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியைச் சேர்ந்தவர் இளமதி . கர்ப்பிணியான இவர் தரகம்பட்டி கிராம சுகாதார நிலையத்தில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அரசு வழங்கும் மகப்பேறு நிதி உதவிக்காக விண்ணப்பித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் ரூ.18000 பெற ரூ 2000 லஞ்சமாக கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள் கேட்டுள்ளார். இதை கொடுக்க விரும்பாத இளமதி கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் லதா தலைமையிலான காவலர்கள், கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள் லஞ்சமாக ரூ. 2000 பெறும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.