ஆப்பாயில் தகராறில் ஹோட்டலை சூறையாடிய அய்யாக்கண்ணு உறவினர்
திருச்சி மாவட்டம் முசிறியில், ஆப்பாயில் தகராறில் ஹோட்டலை சூறையாடியதோடு, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரையும் விவசாய சங்க அய்யாக்கண்ணு உறவினர்கள் அடித்து உதைத்ததாக புகார் எழுந்துள்ளது.
அய்யாக்கண்ணு சகோதரி மகனான ராஜபாண்டி, முசிறி கைகாட்டி அருகே ஹோட்டலில் ஆப்பாயில் ஆர்டர் செய்து வருவதற்கு தாமதமானதாகக் கூறப்படுகிறது. இதனால் கடை உரிமையாளர் பாஸ்கர், மாஸ்டர் முருகேசன் ஆகியோரை ராஜபாண்டி தாக்கியதோடு ஹோட்டலை சூறையாடியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சுரேஷ், அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வீடியோ எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டியும் அவரது அண்ணனும் வழக்கறிஞருமான கார்த்திகேயனும் சுரேஷை அடித்து உதைத்து அவரது செல்போனை பிடுங்கி உடைத்துள்ளனர்.
சுரேஷ் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யாக்கண்ணு சகோதரி மகன்களான ராஜபாண்டி, கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.