கேட்ட உணவு தர மறுத்ததால் ஓட்டலுக்கு தீ வைத்த மர்ம கும்பல்... காவல்துறை தீவிர விசாரணை
சேலத்தில் கேட்ட உணவை கொடுக்க உரிமையாளர் மறுத்ததால் தாபா ஓட்டலை எரித்து விட்டு மர்ம கும்பல் ஒன்று தப்பியோடிய சம்பவம் குறித்து ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள திமிரிகோட்டை பகுதியில் தனியார் தாபா ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகமானது ஓமலூர் - மேட்டூர் செல்லும் சாலையில் இருப்பதால் குடும்பத்துடன் வந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திங்களன்று ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர். அப்பொழுது இரவு நேரம் ஆகிவிட்டதால் இளைஞர்கள் கேட்ட உணவு காலியாகி விட்டதாக ஓட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களையெல்லாம் கிழித்தெறிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஓமலூர் காவல்துறையினர் இளைஞர்களை சமாதானபடுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் சென்ற சுமார் ஒரு மணிநேரம் கழித்து ஒட்டலில் திடீரென தீபிடித்து எரிந்தது. இதை பார்த்த உரிமையாளர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து மற்ற பகுதிகளில் தீ பரவாமல் தடுத்தார். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லாத நிலையில் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ வைத்தவர்கள் சாப்பிட வந்த இளைஞர்களா அல்லது வேறு யாரேனும் தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் ஓமலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் பகுதிகளில் உள்ள தாபா உணவகங்களில் இளைஞர்கள் மது அருந்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் பலநேரங்களில் வாக்குவாதங்கள் முற்றி கைகலப்பு சம்பங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது. அதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினால் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.