மனித உரிமை ஆணைய உத்தரவு அரசை கட்டுப்படுத்தக் கூடியதே: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு


 மனித உரிமை ஆணைய உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்தக்கூடியதா? என்று கோரிய வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்பது அரசைக் கட்டுப்படுத்தக்கூடியது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டை அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்கலாம் என்றும் அதை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மாநில, மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்துமா? பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்குமாறு நேரடியாக மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?


என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு தீர்வு காண, இந்த வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன் பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைத்தார்.

அதன்படி இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்பது அரசை கட்டுப்படுத்தக்கூடியது என்றும் அதை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் மனித உரிமை ஆணையப் பரிந்துரைகளை, தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், அதே நேரத்தில் ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அரசும் நீதிமன்றத்தை நாடலாம் என விளக்கம் அளித்துள்ளனர்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்படும் உத்தரவில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை வசூலித்துக் கொள்ளலாம் என தெளிவு படுத்தியுள்ள நீதிபதிகள், எவ்வளவு தொகை மற்றும் கால நிர்ணயம் குறித்து உரிய நோட்டீஸ் அனுப்பி முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மனித உரிமை ஆணையப் பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image