தமிழகத்தில் 2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்..
தமிழகம் முழுவதும் 2வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் அவசிய பணிகள் முடங்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
போக்குவரத்து கழக வேலைநிறுத்தம் காரணமான ஊதிய ஒப்பந்தத்தை 2019 செப்டம்பர் முதல் 19 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று சென்னையில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப காலை வேளையில் 13 சதவீதமும், பகல் பொழுதில் 16 சதவீதமும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் தமிழகம் முழுவதும் 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தமிழக அரசு வேலை நிறுத்தத்தை உடைப்பதில் காட்டுகிற அக்கறையை பேசி தீர்ப்பதில் காட்டுவதையே தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன. தற்போது இன்று 10 சதவீத பஸ்கள் மட்டும் ஓடுகின்றன.
இந்த நிலையில் பல்லவன் சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுகுறித்து எம்.சண்முகம் எம்.பி. கூறியதாவது:- போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் வேலைநிறுத்தமும் தொடரும், அத்துடன் பயிற்சி இல்லாத டிரைவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களை அழைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்திருப்பதால் இன்று காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அத்துடன் மாலை 4 மணிக்கு பல்லவன் சாலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.