ஒரு தொகுதிக்கு மட்டும் 20.61 கோடி ஒதுக்கீடா?” : எடப்பாடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

 


தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்து 53 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, 2020-21ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மூன்றில் இரண்டு பகுதியான 702 கோடி ரூபாய், ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டி, நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அமைச்சர் தங்கமணியின் தொகுதி உள்பட மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் தொகுதியை வளப்படுத்தும் நோக்கத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறை கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளையும் சமமாக பாவிக்க வேண்டும் எனவும், தேர்தல் நெருங்குவதால் இப்பணிகளுக்கான டெண்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பணிகளுக்கான டெண்டர் கோரியது, பணிகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்களை தேதி வாரியாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்க, அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)