அதிரடி- 2017 அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் முறையீடு- மார்ச் 15-ல் விசாரணை!
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அவர்கள் பதவியில் தொடர தடை விதிக்க வேண்டும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இந்நிலையில் 2017ம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கி கணக்குகளை சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்தநிலையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிவில் வழக்கு என்பதால் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் நான்கவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முறையீடு ஒன்றை மேற்கொண்டார்.