தளபதி விஜய்கிட்ட உரண்டை இழுக்கறதே வேலையா போச்சி..! கதாசிரியர் பாவங்கள்


பொ
ங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஒருவர் சொந்தம் கொண்டாடியுள்ளார்.  கத்தி, சர்கார் வரிசையில் தற்போது மாஸ்டர் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

நடிகர் விஜய் படம் என்றால் போதும், அந்த படம் வெளியிடும் முன்பாகவே அந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறிக் கொண்டு சிலர் போர்க்கொடி உயர்த்துவது வழக்கமான நிகழ்வாக மாறிவருகின்றது.

அந்தவகையில் விஜய் நடிப்பில் பல்வேறு தடைகளைத் தாண்டி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் கே.ரங்கதாஸ் என்பவர் தற்போது உரிமை கோரியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ரங்கதாஸ், கடந்த மாதம் 18ந்தேதி சங்கத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் 'நினைக்குமிடத்தில் நான்' என்ற பெயரில் நாயகனை கல்லூரி வாத்தியராக நினைத்து எழுதிய கதையை மாஸ்டர் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து கடந்த 16 ந்தேதி சென்சார் செய்யப்பட்டுள்ளது என்றும் டீசர் காட்சிகள் மற்றும் படத்தின் கதை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் மாஸ்டர் படத்தின் கதை என்னுடைய கதையை ஒத்துப்போவதாக உணர்கிறேன். எனவே இரு கதைகளும் ஒத்துப்போகின்றதா ? இல்லையா ? என்று ஒப்பீடு செய்து சான்றளிக்க கோரி இருந்தார்.

இவரது கோரிக்கையை சங்கம் கண்டு கொள்ளாமல் விட்ட நிலையில் மீடியாக்கள் முன்பு மாஸ்டர் கதைக்கு சொந்தம் கொண்டாடி கே. ரங்கதாஸ் குரல் கொடுத்துள்ளார்

படம் வெளியாக சில தினங்களே உள்ள நிலையில் படத்தை தடுக்கும் நோக்கில் சொந்தம் கொண்டடுவது சரியா ? என்ற கேள்விக்கு சங்கத்தின் மூலம் தற்போது வரை தனக்கு நீதி கிடைக்க வில்லை என்றும் சட்ட போராட்டம் நடத்த போவதாகவும் கே.ரங்கதாஸ் தெரிவித்தார்

ஒரு கட்டத்தில் மாஸ்டர் படத்தின் கதை என்ன ? உங்கள் படம் என்ன கதை ? என்று செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளால் நிலைகுலைந்து போன ரங்கதாஸ், ஒரு வேளை தனது கதை திருட்டு போயிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் , அது தான் மாஸ்டர் படத்தின் கதையா ? என்பது தனக்கு தெரியாது என்றும் படம் வந்த பிறகு வழக்கு தொடுப்பேன் என்று கூறி சமாளித்தார்

ரங்கதாஸ் ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் திரையுலகில் நான்கைந்து பழைய படங்களை சுட்டு ஒரே படம் எடுப்பவர்கள் எல்லாம் குறுகிய காலத்தில் அட்லி போல வெற்றிப்பட இயக்குனர்களாகி விடுகின்றனர் என்றும் கத்தி, சர்கார் என்று அடுத்தவர் கதையை சுட்ட குற்றச்சாட்டுக்குள்ளான ஏ.ஆர். முருகதாஸ் போன்றோர் இழப்பீட்டு தொகையுடன், படத்தில் நன்றி கார்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்கின்றனர் திரை உலகினர்.

அதே நேரத்தில் இயக்குனர்கள் செய்யும் தகிடுதத்தங்களால், விஜய்யின் படங்கள் கடைசி நேரத்தில் சர்ச்சையில் சிக்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)