நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது... கைதான மாணவியின் தந்தை வாக்குமூலம்...

 இந்த ஆண்டிற்கான மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக் ஷா என்பவர் கலந்து கொண்டார். அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். என்பதும் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார் என்பதும் தெரியவந்தது.

மேலும், 610 மதிப்பெண்கள் எடுத்த ஹருத்திகா என்ற மாணவியின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலை எடுத்து அதில் அவரது புகைப்படத்தை அகற்றி விட்டு தனது படத்தை ஒட்டி சான்றிதழ் தயாரித்ததும் அம்பலமானது.

மேலும், உண்மையான மதிப்பெண் சான்றிதழில் இருந்த சீரியல் நம்பரை அகற்றிவிட்டு தீக் ஷாவின் சீரியல் நம்பரும் மாற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரக கூடுதல் இயக்குனர் செல்வராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பெரியமேடு போலீசார் மாணவி தீக் ஷா மற்றும் மாணவியின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் ஏமாற்றுதல், மோசடி செய்தல், போலியான ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மாணவியின் தந்தை பாலசந்தரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நீட் மோசடி பற்றிய பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ராமநாதபும் மாவட்டத்தை சேர்ந்த பிரபல பல் மருத்துவரான பாலசந்திரன் தன் மகளை எப்படியாவது மருத்துப்படிப்பில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்துள்ளார்..

ஆனால் நீட் தேர்வில் அவரின் மகள் 27 மதிப்பெண் மட்டும் எடுத்து தோல்வியடைந்தார். இதனால் மனமுடைந்த பாலசந்தர் தனது நண்பர்களிடம் மகளின் எதிர்காலம் பற்றி புலம்பியுள்ளதாக தெரிகின்றது.

அப்போது இடைத்தரகர் ஜெயராமன் என்பவர் பாலசந்திரனை அவரது வீட்டிற்கு வந்து சந்தித்துள்ளார் . நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் சில மாற்றங்களை செய்து, உங்கள் மகள் மருத்துவ படிப்பில் சேர தான் உதவுவதாக வாக்குறுதி கொடுத்ததாக தெரிகின்றது.

அத்துடன் இது போன்று மோசடி செய்து பலரை மருத்துவ படிப்பில் சேர்த்து விட்டுள்ளதாகவும் ஜெயராமன் சொல்லியுள்ளார். மோசடிக்கு சம்மதித்த பாலசந்திரன் முதற்கட்டமாக மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்ய ரூ 25 முன்பணமாக கொடுத்ததாக தெரிகின்றது. தொலைபேசி எண், மற்றும் தன்னை பற்றிய எந்த விபரத்தையும் தெரிவிக்காத ஜெயராமன் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து நானே உங்களை வந்து சந்திப்பதாக தெரிவித்துள்ளார் .

அடுத்த இரண்டு நாட்களில் போலி சான்றிதழ் மற்றும் அழைப்பு சான்றிதழை தயாரித்து கொடுத்த ஜெயராமன் மீதி தொகையை மாணவி மருத்துவ படிப்பில் சேர்ந்தவுடன் பெற்றுக்கொள்வதாக தெரிவித்து சென்றுள்ளார்.