அரியலூர் எஸ்எஸ்ஐ தற்கொலை….லீவு கிடைக்காத விரக்தி..?
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன்(53). அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மதுவிலக்கு பிரிவு எஸ்எஸ்ஐயாக ஜெகதீசன் பணியாற்றி வந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும், லோகேஷ் பிரசாத் என்ற மகனும் உள்ளனர். இதில் காயத்ரி டாக்டருக்கும், லோகேஷ் பிரசாத் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஜெகதீசன் தா.பழூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராதாவின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், பொங்கல் பண்டிகைையயொட்டி அவர் நினைவாக படையலிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராதா, தனது மகள், மகனுடன் அவருடைய தந்தையின் ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெகதீசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை தொடர்பாக தொடர்பாக மதுவிலக்கு பிரிவில் இருந்து ஜெகதீசனின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் ஜெகதீசன் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீசார் ஜெகதீசன் குடியிருந்த தா.பழூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் மொய்சனுக்கு தகவல் தெரிவித்து, ஜெகதீசனை நேரில் பார்க்க கூறினர். அதன்படி மொய்சன், ஜெகதீசன் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.
அப்போது கதவு தாழிடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது. அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டநிலையில் ஜெகதீசன் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தா.பழூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் காவலர் குடியிருப்புக்கு உடனடியாக விரைந்து வந்தனர். பொங்கலுக்கு ஜெகதீசன் லீவு கேட்டதாகவும் மறுக்கப்பட்டதாகவும், சரி இன்னைக்காவது லீவு கொடுங்கள் என விரக்தியில் வீட்டிற்கு வந்த ஜெகதீசன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது..