நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் மின்சார வாரியம் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக கவர்னருக்கு தொமுச கடிதம்.
நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் மின்சார வாரியம் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக கவர்னருக்கு தொமுச கடிதம்.
தமிழக மின்சார வாரியத்தில் முறைகேடாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிநியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது குறித்து தீர்வு காண வேண்டி தமிழக கவர்னருக்கு மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் அ.சரவணன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது.
மின் வாரியத்தில் தற்போது 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே கம்பங்கள் நடுதல் மின் மாற்றி அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான் செய்து வருகின்றனர்.
மின்வாரியத்தில் இல்லாத கேங்மேன் என்ற 5,000 பணியிடங்களை அதிமுக அரசு உருவாக்கி தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி பணம் வசூல் செய்துள்ளனர். இதன் மூலம் மின்வாரியமும், ஆளும் கட்சியினரும் தாங்கள் விரும்பும் நபரை பணியில் சேர்க்கத் திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது.
தமிழக மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது. இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கப்பட்டதாக புகார்எழுந்தது.
கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்களாக உள்ளனர். எனவே, கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் கேங்மேன் பணிநியமனத்திற்கு தடை விதித்து தொடர்புடைய மின்வாரிய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அப்போது நீதியரசர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது அதன் படி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நலையில் மின் வாரியம் தன்னிச்சையாக உருவாக்கிய கேங்மேன் பதவிக்கு ஆட்களை நேரடி நியமனம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்குத் தடை கோரியும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளது. ஆனால் மின் வாரியம் தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கில் செயல்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி மின்வாரிய கேங்மேன் பதவி தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது கேங்மேன் பணிநியமனம் தொடர்பாக மின் துறை அமைச்சர் தெரிவித்து வரும் கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை தங்களுடைய கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது கேங்மேன் பதவி தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அலட்சிய போக்கில் செயல்பட்டு வரும் மின்சார வாரியம் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் உள்ளது.