தாலுகா காவல் நிலையங்களுக்கு சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்த 2,200 காவலர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிய 2,200 காவலர்களை தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக காவல் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் மற்றும் ஒரே பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை பணியிடமாற்றம் செய்வதற்கான பணிகள் தற்போது தமிழக காவல் துறையில் தொடங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவை தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் பணியில் பணியாற்றி வந்த 5004 காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து கடந்த டிசம்பர் 20ம் தேதி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து சென்னை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 2,200 காவலர்களை மாநகரில் உள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மண்டலங்களில் உள்ள தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் அனைவரும் பணியிடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யவோ அல்லது வேறு தாலுகா காவல் நிலையத்திற்கு மாறுதல் வேண்டி ஒரு ஆண்டு வரை மனு சமர்ப்பிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.