நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில் 2 பேர் கைது; தீ வைத்தவருக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்கு சீல்

 


நீலகிரி மாவட்டத்தில், காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பலத்த காயத்துடன், மசினகுடி பகுதியில் சுற்றிவந்த காட்டு யானை, கடந்த மாதம் 28ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காது மடல் கிழிந்து உடல்நலம் குன்றியிருந்த அந்த யானை,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வந்த போது சிலர், டயரில் தீ வைத்து, யானையின் மீது வீச, அதன் காது மடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த காட்சி வெளியானது.

இதுதொடர்பாக ரேமண்ட், மற்றும் பிரசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நிக்கிராயன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். யானைக்கு தீ வைத்தவரின் தங்கும் விடுதி அனுமதியின்றி செயல்பட்டதால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்‍.