15 ஆம் தேதி சென்னையில் இறைச்சி விற்பனைக்கு தடை- மாநகராட்சி ஆணையர்
அரசு உத்தரவின்படி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் அனைத்து இறைச்சிக் கூடங்களும் இம்மாதம் 15-ஆம் தேதிவெள்ளிக் கிழமை மூடப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15.01.2021 (வெள்ளிக் கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 15.01.2021 (வெள்ளிக் கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது