நெடுஞ்சாலையில் கொள்ளை முயற்சி.. வைரலாகப் பரவும் வீடியோ.! எச்சரிக்கும் காவல்துறை...


 தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டியின் முகத்தில் டார்ச் அடித்து நிறுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபடுவது போன்று பரவும் வீடியோ குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர். 

தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவரின் கண்ணில் டார்ச் அடித்து நிறுத்தி, சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுகின்றனர். வாகன ஓட்டி உடனடியாக வாகனத்தை பின்னால் இயக்கி தப்பிக்கிறார்.

கடந்த 18ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்றதாகக் கூறி, இந்த வீடியோ சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், வீடியோ குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், குறிப்பிட்ட அந்த இடத்தில், அந்த தேதியில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்கின்றனர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர் ஏன் போலீசில் புகாரளிக்காமல் சமூக வலைதலங்களில் பதிவேற்றி பீதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உறுதியான, உண்மையான விவரங்கள் இல்லாத வீடியோக்களை சமூக வலைதலங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.