இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண தாய் செய்த வினோதமான செயல்..
இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண்பது நம் அனைவருக்கும் மிகப்பெரிய சவாலான விஷயம்தான். குறிப்பாக, இரட்டையர்கள் சிறு குழந்தைகளாக இருப்பார்களேயானால் அது மிகவும் கஷ்டம். நம்மில் பலருக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கும்.
சிலநேரம், குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்கூட அவர்களை அடையாளம் காண்பதில் குழம்பிவிடுவார். அந்த வகையில், தாய் ஒருவர் தன் குழந்தைகளை அடையாளம் காண்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டதால் செய்த வினோதச் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுள் ஒருவரது உடம்பில் டாட்டூ குத்திவிட்டதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெட்ரிப் இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், குழந்தைகளை அடையாளம் காணும்போது எதிர்கொண்ட சிக்கல்களைப் பற்றி தெளிவாக விவரித்துள்ளார்.
"எனக்கு ஆடம் (Adam), ஜாக் (Jack) என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அதில், ஜாக்குக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், வாரம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று ஊசிபோட வேண்டும். அண்மையில், குழந்தைகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஜாக்குக்கு பதிலாக ஆடமுக்கு, தனது மாமியார் ஊசியை தவறுதலாகச் செலுத்திவிட்டார்" எனக் கூறியுள்ளார்.
"தவறுதலாக குழந்தைக்கு ஊசியைச் செலுத்திவிட்டதை அவர் உணர்ந்து உடனடியாக ஆடமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். மருத்துவமனையில் அதற்குரிய சிகிச்சை அளித்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்து நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, சிரித்துக்கொண்டு ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தனர்" என தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மாமியார் ஆடமுக்கு செலுத்திய மருந்து மிகவும் குறைவான வீரியம் மட்டுமே கொண்டிருந்ததால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ”வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஒருசில நாட்களில் அதுவும் சரியாகிவிட்டது. ஆடமுக்கு குணமாகும் வரை எனது மாமியார் உடனிருந்து குழந்தையைக் கவனித்துக்கொண்டார். அதன்பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் இருவரையும் குழந்தை கவனிப்பகத்தில் சேர்த்துவிட்டேன் " என அந்த தாய் விளக்கியுள்ளார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகே மருத்துவரின் ஆலோசனைப்படி, சிகிச்சை எடுத்துவரும் ஜாக்குக்கு டாட்டூ குத்தியதாகவும், இதனால் எளிமையாக அவனை அடையாளம் கண்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்று வருவதாகவும் அந்த தாய் கூறியுள்ளார். டாட்டூ குத்தப்பட்டதைக் கேட்டு தனது மாமியார் கடுமையான கோபத்தை வெளிக்காட்டியதாகக் கூறியுள்ள அந்த தாய், டாட்டூ குத்தப்பட்ட பிறகும்கூட மாமியாரால் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
டாட்டூ என்பது தோல் மீது வரையப்பட்டுள்ள மிகச்சிறிய புள்ளி மட்டுமே என விளக்கியும், மாமியார் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக நடந்து கொண்டிருப்பதாக அந்த தாய் கூறியுள்ளார். சுற்றத்தார்கூட இதைப்பற்றி புரிந்துகொள்ளாமல், நோயைக் குணப்படுத்துவதை விட்டுவிட்டு குழந்தைக்கு டாட்டூ குத்துவதில் கவனம் செலுத்துகிறாள் எனப் பேசுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தாயின் இந்தக் கட்டுரையைப் படித்த பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.