மீனாட்சியம்மன் கோவிலில் நிரந்தர தீயணப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


 மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தென் தமிழகத்தின் மிகப்பெரும் அடையாளமாக விளங்கி வருகிறது. 


இந்த கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராய மண்டபத்தின் தூண்கள் மற்றும் கூரைப் பகுதிகள் சேதமடைந்தன. ஆனால் தற்போது வரை அது சீரமைக்கப்படவில்லை. அந்த பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு வாகனம் வரமுடியாத நிலை இருக்கிறது.

இதற்கிடையில் வாகன நிறுத்துமிடத்தில் தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு தீயணைப்பு வீரர்கள் அமரக்கூட வசதிகள் இல்லை. மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் தீயணைப்பு வாகனம் எளிதில் பழுதாகிறது. ஆகவே இந்த தீயணைப்பு நிலையத்தை நிரந்தரமாக ஒரு இடத்தில் அமைக்க வேண்டும்” என மனுதாரர் அப்துல் ரகுமான் ஜலால் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், மீனாட்சியம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க 1 கோடியே 17 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீவிபத்தின் போது சேதமடைந்த வீரவசந்தராய மண்டபத்தை சீரமைக்க நாமக்கல் பகுதியில் இருந்து கற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கொண்டு வர காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் இஸ்லாமியராக இருக்கும் போதும் பழமையான இந்துக்கோவிலின் மீது அக்கறை கொண்டு இந்த வழக்கை தொடர்ந்திருப்பது பாராட்டத்தக்கது” என்று தெரிவித்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் எவ்வளவு காலத்திற்குள் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நாமக்கல் பகுதியில் இருந்து கோவிலுக்கான கற்களை கொண்டு வருவதற்கு நாமக்கல் காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.