பெரும்பாக்கத்தில் குடியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து கூவம் ஆற்றில் இறங்கி மக்கள் போராட்டம்

 


கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் தங்களை பெரும்பாக்கம் போன்ற தொலைதூரத்தில் மறுகுடியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து சத்தியவாணிமுத்து நகர் மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, கூவம் ஆற்றின் கரையோரம் 44 அமைவிடங்களில் வசித்து வந்த 14,257 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இன்னும் 2,200 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டியுள்ளது.

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக அதே பகுதி காந்தி நகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்த்தும் பணி நேற்று தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

நல்ல பள்ளிகள், அரசு பொது மருத்துவமனை, வேலைவாய்ப்பு, ரயில் போக்குவரத்து ஆகியவை எங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே அமைந்துள்ளன. ஆனால், மறுகுடியமர்வு என்ற பெயரில் எங்களை பெரும்பாக்கத்துக்கு அனுப்புகின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, எங்களை புளியந்தோப்பு, மூலகொத்தளம், காசிமேடு போன்ற பகுதிகளில் மட்டுமே மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகிறோம். இதுவரை எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா