பட்டா பெயர் மாற்ற 8 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
திருவள்ளூர்: பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்.
இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மேப்பூர் விஏஓ சதீஷ்குமாரிடம் சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். இதனை ஆய்வு செய்த விஏஓ சதீஷ்குமார், பட்டா மாற்றம் செய்ய 8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நாராயணன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய பணத்தை நேற்று மாலை விஏஓ சதீஷ்குமாரிடம், நாராயணன் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச போலீசார், சதீஷ்குமாரை கையும், களவுமாக மடக்கி பிடித்து, கைது செய்தனர்.