செங்கல்பட்டு அருகே பட்டா மாற்றம் செய்ய 6 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 பேர் கைது

 


செங்கல்பட்டு: பட்டா மாறுதல் செய்ய 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2 மாதத்துக்கு முன், மேலமையூர் பகுதியில் வீட்டுமனை வாங்கினார். அந்த மனைக்கு பட்டா கேட்டு, கடந்த மாதம் மேலமையூர் விஏஓ செங்கல்பட்டு ஜெசிகே.நகரை சேர்ந்த சிவராமன் (46) என்பவரை அணுகினார். மனு கொடுத்த ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் அவருக்கு பட்டா மாறுதல் செய்யவில்லை. 

இதையடுத்து மீண்டும் விஏஓவிடம், சென்று கேட்டார். அப்போது, பட்டா மாற்றம் செய்ய 6 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், உடனே பட்டா மாறுதல் செய்யப்படும் என சிவராமன், அவரது உதவியாளர் மேலமையூரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (40) ஆகியோர் கேட்டனர்.


ஆனால், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத மணிகண்டன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி பாஸ்கரன் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய பணத்துடன் நேற்று மாலை மணிகண்டன் விஏஓ அலுவலகம் சென்றார். 

அங்கிருந்த விஏஓ சிவராமன், அவரது உதவியாளர் முரளிகிருஷ்ணன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 2 பேரையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அவர்களை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.