விருத்தாச்சலம் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு... காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதியக்கோரி மனு தாக்கல்

விருத்தாச்சலம் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி செல்வமுருகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதியக்கோரி அவரின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் செல்போன் திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.


இந்நிலையில், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வியாபாரி செல்வமுருகனின் மனைவி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், தனது கணவர் செல்வமுருகன் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.