சென்னை மியூசியத்தில் பைரவரை தூக்கியது யார்... சிலை குறைப்பாளர்கள் அட்டூழியம்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து பழமையான பைரவர் சிலை திருடுபோன சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிலைக்குறைப்பாளர்களாக மாறிய அருங்காட்சியக பணியாளர்களிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.


 


வேலூர் மாவட்டம் திருமலைசேரி நகரில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சோமநாதசாமி கோவிலில் உள்ள ஏராளமான கல்தூண்களும், 12 யோகி தேவி சிலைகள், பைரவர் கற்சிலை, துவாரபாலகர்கள் கற்சிலைகளும் பல ஆண்டுகளுக்கு முன் களவாடப்பட்டதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வரலாற்று ஆதாரங்களுடன் டில்லிபாபு என்பவர் புகார் அளித்தார்.


 


புகாரின் பேரில் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்த வாலாஜாபேட் போலீசார் அந்த வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அந்த சிலை சென்னை அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


 


2008 ஆம் ஆண்டு வாக்கில் சோமநாத கோவிலில் களவாடப்பட்ட அந்த கற்சிலையை இடையில் மீட்ட போலீசார் அதனை பாதுகாப்பிற்காக அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதாக கூறப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த பின்னர் பைரவர் சிலையை சோமநாத சாமி கோவிலில் ஒப்படைக்க முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.


 


இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை அருங்காட்சியகத்தில் இருந்து பைரவர் சிலை மாயமானதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்காமல் மவுனம் காத்துவந்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.


 


மியூசியத்தில் இருந்து ஏராளமான சிலைகள் மாயமாகி இருக்கலாம் என்று டில்லிபாபு என்பவர் மீண்டும் புகார் எழுப்பியதை தொடர்ந்து அருங்காட்சியகத்தில் இருந்து களவுபோன பைரவர் சிலையை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 


பைரவர் சிலை மட்டும் அல்ல காவல்துறையினரால் மீட்கப்படும் பெரும்பாலான சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும்,அவற்றை முறையாக பராமரிக்காமல் வெயிலிலும் மழையிலும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்ததாகவும், அப்படி வைக்கப்பட்ட ஏராளமான சிலைகள் மாயமாகி உள்ளதாகவும் அந்தவரிசையில் பைரவர் சிலையும் களவு போயிருக்க கூடும் என்று சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.


 


அதே நேரத்தில் பலத்த பாதுகாப்பு மிக்க சென்னை அருங்காட்சியகத்தில் இருந்து எவரும் களவாடி சென்றிருக்க இயலாது என்றும் அங்குள்ளவர்களின் ஒத்துழைப்புடனே மன்னர் கால பைரவர் சிலையை எடுத்துச்சென்றிருக்க கூடும் என்றும் கூறப்படுகின்றது. இதையடுத்து அருங்காட்சியக பணியாளர்களை விசாரிக்க்க சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


 


திருமலைச்சேரி கோவிலில் புணரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறி சிலைகளும் கற்சிலைகளும் அங்கிருந்து உடைத்து எடுத்துச்சென்றிப்பார்கள் என்று கூறப்படுவதால் அங்கு திருப்பணிகள் மேற்கொண்ட குழுவினரை விசாரித்தால் ஆரம்பத்தில் களவாடிய சிலை கடத்தல் கும்பல் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


 


அருங்காட்சியகத்தில் இருந்து சிலை களவு போயிருப்பது குறித்து விசரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.