நிவர் புயல் குறித்து பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் - கமிஷ்னர் வேண்டுகோள்
நிவர் புயல் குறித்து பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் காவல்துறை துணையிருக்கிறது என்றும் சென்னையில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் கமிஷனர் மகேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் 3 கூடுதல் கமிஷனர்கள், 4 இணைக்கமிஷனர்கள் மற்றும் 12 துணைக் கமிஷனர்கள் மேற்பார்வையில் புயல் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
அதன்பேரில் காவல் மீட்புக்குழுவினர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது, விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நிவர் புயல் தொடர்பாக பொதுமக்கள் அவசர உதவிக்கு சிறப்புக் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு வாட்ஸ் அப் வசதியுடன் தனி செல்போன் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் வெள்ளம் சூழும் பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் புளியந்தோப்பு, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணி மற்றும் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியினை பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர், மாலை மெரினா கடற்கரை பகுதிக்கு சென்ற அவர், அங்கு கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கை குறித்து அறிவுரைகள் வழங்கினார். மேலும், கலங்கரை விளக்கம் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.
‘‘போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் சென்னை நகர காவல்துறை மற்றும் அரசுத்துறைகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து மீட்புப்பணி மற்றும் பாதுகாப்பு பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் நிவர் புயல் குறித்து பயம் கொள்ள வேண்டாம். அவசியம் இன்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும், அவசர அழைப்புக்கு சென்னை பெருநகர காவல்துறை உடனிருந்து உதவும்’’ என்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.