அமெரிக்க அதிபர் தேர்தல் இழுபறி...காரணம் என்ன...
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு இழுபறி நீடிக்கவும், ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுவதற்குமான சில முக்கிய காரணங்களை காணலாம்..
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை விட ஜோ பைடன் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒழுக்கமான அரசியலை மீட்டெடுக்க பைடன் அளித்த உத்திரவாதமும், பெண்களுக்கு குறிப்பாக கருப்பினத்தவர்களுக்கு அளித்த முக்கியத்துவமும் கூறப்படுகிறது. உலக நாடுகளுக்கு மத்தியில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் நிலையை மீண்டும் உயர்த்தப் போவதாக உறுதி அளித்ததும் பைடனின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
அதேசமயம், கொரோனா பாதிப்பால் இரண்டு லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அதிபர் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாக மாறியது. அவரது ஆட்சியில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற நிறவெறித் தாக்குதல்கள், காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது போன்றவை இளைஞர்கள் இடையே ட்ரம்புக்கான ஆதரவை சரித்தது. இறுதியாக, தேர்தல் குறித்து டிரம்ப் வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அவரது செல்வாக்கை பாதித்து தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனிடையே, அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4வது நாளாக நீடித்து வருகிறது. 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததும், 9 கோடிக்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் பதிவானதும் காரணமாகக் கூறப்படுகிறது.