அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 72.


 


தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 


அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பில் உள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:15 மணி அளவில் துரைகண்ணு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.


 


இன்று காலை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனை வர உள்ளதாகவும், அவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


 


இந்த நிலையில் அமைச்சரின் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கும், குறிப்பாக அதிமுகவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் மறைவு குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சர் துரைக்கண்ணு பண்பாளர் என்றும் எளிமையானவர் என்றும் புகழாரம் சூட்டினார்.


 


அமைச்சர் துரைக்கண்ணு 1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2006, 2011, 2016ஆம் ஆண்டு என தொடர்ந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அ.தி.மு.க.வில் மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்