ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் போலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோத கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பாக விசாரணை நடத்திய சகாயம் தனது அறிக்கையில் 1,11,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து சகாயம் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில், சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


 


 


 


இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராணைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.