சென்னையில் அமித் ஷா வருகையின் போது பதாகை வீச்சு

சென்னைக்கு வருகை புரிந்த, மத்திய உள்துறை அமித் ஷா, தொண்டர்களை சந்திக்க சாலையில் இறங்கி நடந்தபோது, அவரை நோக்கி, பதாகையை தூக்கி எறிந்த நபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


 


பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 


விஐபி நுழைவு வாயில் வழியாக, புறப்பட்ட அமித் ஷா, சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களை கண்டவுடன், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்து சென்று, அவர்களின் உற்சாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.


 


இவ்வாறு, மத்திய உள்துறை அமித் ஷா சாலையில், நடந்து சென்றபோது, தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், கமாண்டோ வீரர்கள் புடைசூழ நடந்துவந்த, அமித் ஷாவை நோக்கி, பதாகை ஒன்றை வீசினார். ஆனால் அந்த பதாகை அவரது அருகிலேயே விழுந்தது. இருந்தாலு அமித் ஷாவை நோக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 


இதையடுத்து, அந்த நபரை, பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக மடக்கிப் பிடித்தனர். அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் துரைராஜ் என்பதும் தெரியவந்தது. பால் வியாபாரம் செய்து வரும் துரைராஜ், சம்பவத்தின்போது, மதுபோதையில் இருந்ததாகவும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.