சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற நினைக்கிறதா அதிமுக- வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணி

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள நினைப்பதாலேயே வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில் பாஜகவுடன் யாரும் கூட்டணி அமைக்க தயங்கிய காலத்தில், அதாவது 1998 மக்களவைத் தேர்தலில் அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது.


வாஜ்பாயை பிரதமராக முன்னிறுத்திய அந்தக் கூட்டணிக்கு வெற்றியும் கிடைத்தது. முதன்முதலாக பாஜகவுக்கு தமிழகத்தில் 3 எம்.பி.க்கள் கிடைத்தனர். ஆனால், அந்தக் கூட்டணியும் வாஜ்பாய் ஆட்சியும் நீடிக்கவில்லை. 1999 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக இணைந்தது. அந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 2001-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த திமுக படுதோல்வி அடைந்தது.


அதன்பிறகு பாஜகவுடன் கூட்டணி என்பதை திமுக நினைத்துப் பார்க்கவே இல்லை.


கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜககூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் புதுச்சேரி உட்பட 40தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அதன்பிறகு ஜெயலலிதா இருக்கும்வரை பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.


மோடியுடன் நெருங்கிய நட்பு இருந்தாலும் 2014-ல் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைக்கவில்லை. மாறாக 'மோடியா, லேடியா' என்று மோடிக்கு எதிராக தன்னை முன்னிறுத்தியே ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமைந்த அதிமுக -பாஜக கூட்டணி மிகப்பெரியதோல்வியைச் சந்தித்தது. அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9-ல் வென்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது.


இந்தத் தேர்தல் தந்த பாடத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயங்குகிறது.