பாடி ஸ்ட்ராங்கு பேங்க் பேலன்ஸ் வீக்கு கோடிகளை சுருட்டிய சத்யா..! பிட்னஸ் சென்டரில் பிஸ்கோத்து

ராணிப்பேட்டையில் அழகு நிலையங்களுக்கு வரும் பெண்களிடம், 5 நாட்களுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கில் வட்டி தருவதாக ஆசை காட்டி, லட்சக்கணக்கான ரூபாயை வசூல்செய்ததாகக் கூறப்படும் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


 


ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 நாட்களில் 3 ஆயிரம் ரூபாய் வட்டி தரும் மோசடி பேங்க்கை நடத்திய வேலூர் மாவட்டம் பள்ளேரி பகுதியை சேர்ந்த டைட் மேக்கப் சத்யா இவர் தான்...!


 


ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான பிட்னஸ் சென்டர் மற்றும் அழகு நிலையம் போன்றவற்றிற்கு செல்வதை வாடிக்கையாக்கிய சத்யா, அங்கு வரும் பெண்களுடன் நட்பாகப் பழகியுள்ளார்.


 


தன்னை ஒரு பைனான்சியராக காட்டிக் கொண்ட சத்யா, வழக்கமாக வங்கியில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 600 முதல் 700 ரூபாய் தான் வட்டியாக கிடைக்கும் அதுவும் ஒரு மாதம் கழித்து தான் கிடைக்கும், தன்னுடைய பைனான்ஸில் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் 5 நாளைக்கு ஒரு முறை 3 ஆயிரம் வட்டிவரும் 2 ஆயிரம் உங்களுக்கு, ஆயிரம் ரூபாய் மட்டுமே கம்பெனிக்கு என்று ஆசையை தூண்டியுள்ளார்.


 


அதே போல தன்னிடம் 5 சவரன் நகை கொடுத்தால் பத்து நாட்களில் நகையைத் திருப்பிக் கொடுக்கும்போது 5 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் அதில் 3 ஆயிரம் உங்களுக்கு 2000 கம்பெனிக்கு என்றும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.


 


முதலில் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தியவர்களுக்கு சில மாதங்கள் அவர்களிடம் பெற்ற பணத்தையே வட்டியாக கொடுத்து மேலும் மேலும் ஆசையை தூண்டி விட்டிருக்கிறார். இதனை நம்பி 20க்கும் மேற்பட்ட பெண்கள் பேராசையில் கணவனுக்கு தெரியாமல் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையில் அள்ளிக்கொடுத்துள்ளனர். சிலர் 25 சவரன் வரை நகைகளையும் கொடுத்துள்ளனர்.


 


ஆயிரக்கணக்கில் வட்டித்தருவதாக சத்தியம் செய்த சத்யா தன்னிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்தவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். பணத்தை இழந்தவர்களோ, வீட்டிலும் சொல்ல முடியாமல் வெளியிலும் சொல்ல முடியாமல் திருவிழாவில் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு தங்க கடுக்கணைப் பறிகொடுத்த குழந்தைகள் போல தவித்துள்ளனர்.


 


ஒரு கட்டத்தில் அவரை தொடர்பு கொண்டு பேசியவர்களிடம் கம்பெனியில் பணம் எல்லாம் காலியாகிவிட்டது, என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்றும், தனக்குப் பின்னால் முக்கிய புள்ளிகள் இருப்பதாக மிரட்டியதாலும் பணத்தை இழந்த பெண்கள் செய்வதறியாது தவித்துள்ளனர்


 


பணம் - நகையை கொடுத்து 2 வருட காலம் முடிந்தும் பணத்தைத் திருப்பித் பெற இயலாத பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்கள் இணைந்து சத்யா மீது ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதில் சத்யா, தங்களிடத்தில் 60 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், 25 சவரன் தங்க நகையும் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளனர். புகாரின் அடிப்படையில் சத்யாவை சுற்றிவளைத்த காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பூரணி,சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


நிதி நிறுவனங்கள், வங்கி வட்டியை விட ஒரு பைசா வட்டி கூடுதலாக தருவதாக சொன்னாலும் நம்ப வேண்டாம் என்றும், கடந்த காலங்களில் நிதி நிறுவனங்கள் கம்பி நீட்டிய வரலாறே சாட்சி என்றும் எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்,


 


அதே நேரத்தில் பிட்னஸ் சென்டருக்கு சென்று பணத்தை பறிகொடுத்தவர்கள், தங்கள் பேங்க் பேலன்ஸ் வீக்காகி காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் நடையாய் நடக்க தொடங்கியுள்ளனர்..!


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்