உயிருக்கு ஆபத்தான நிலையில் 80 அடி உயரத்தில் பணி செய்யும் மின்வாரிய ஊழியர் - வீடியோ

எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் 80 அடி உயரத்தில், உயர் அழுத்த மின்கம்பியில் நடந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் புயலில் சாய்ந்த மூங்கில் மரங்களை அகற்றி வரும் மின்வாரிய பணியாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் நிவர் புயலின் காரணமாக பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தது. அதேபோல் ஆடுதுறை திருமந்துறை இடையே உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளில் மூங்கில் மரங்கள் காற்றில் சாய்ந்து ஒன்றோடு ஒன்று உரசியபடி இருந்ததால் மூங்கில் மரங்களை அகற்ற மின்வாரிய துறையினர் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.


இதையடுத்து கதிராமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் கள உதவியாளர் உலகநாதன் (வயது 44) என்பவர் மின்கம்பத்தில் ஏறி பின்னர் மின் கம்பிகளில் உயர் அழுத்த மின் கம்பிகளில் சுமார் 80 அடி தூரம் நடந்து சென்று பின்னர் அரிவாளால் மின்கம்பிகளில் ஒன்றோடு ஒன்று சிக்கியிருந்த மூங்கில் மரங்களை அரை மணி நேரம் போராடி அதனை வெட்டினார்.


வெட்டப்பட்ட மூங்கில் மரங்களை மற்ற பணியாளர்கள் கீழே இருந்து அகற்றினர். பின்னர் உலகநாதன் மீண்டும் மின் கம்பிகளிலேயே நடந்து வந்து ஏரிய மின் கம்பம் வழியாக இறங்கினார். நிவர் புயல் மீட்பு பணியில் இவரின் செயலை கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர்


இதுகுறித்து உலகநாதன் கூறியதாவது, எனக்கு சிறு வயது முதலே எலக்ட்ரானிக் பொருள்களின் மீது தான் ஆர்வம். நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருந்தேன். பின்னர் கடந்த 22 ஆண்டுகளாக மின் வாரியத்தில் தற்காலிக பணியாளர் ஆகி, தற்போது நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறேன.


புயல் நேரத்தில் மின் கம்பிகளில் மரங்கள் சிக்கி இருந்ததால் இப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதை அறிந்த நான் அந்த பகுதியில் மீட்பு பணியில் இருந்த போது மின் கம்பிகளுக்கு இடையே சிக்கி இருந்த மரத்தை அகற்ற முன்வந்தேன். சுமார் ஒரு மணி நேர பணியாற்றி மரங்களை அப்புறப்படுத்தினோம்.


இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், மின்கம்பிகளில் மூங்கில் மரங்கள் விழுந்திருந்தால் திருமாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். அங்கு வந்த மின் வாரிய பணியாளர்கள் மூங்கில் மரங்களை அகற்ற சிரமமாக இருக்கும் என கூறினர்.


அப்போது அங்கு பணிக்கு வந்த உலகநாதன் உயிரை துச்சமாக கருதி பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க என்னால் ஆன உதவியை செய்கிறேன் எனக்கூறி கிடுகிடுவென மின்கம்பத்தில் ஏறி கம்பிகளில் நடந்து சென்றார். கை, கால்களில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை தலைக்கவசம் மட்டும் அணிந்திருந்தார் . இவரின் பணியை இப்பகுதி மக்களாகிய நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம் என்றார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)