தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை குறைபாடு தொடர்பாக 304 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை குறைபாடு தொடர்பாக 4 ஆண்டுகளில் 304 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் சிவகங்கை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவரை விடுதலை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்றவியல் வழக்குகளில் விசாரணையை பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து டிஜிபி தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் வந்த அந்த வழக்கில், டிஜிபி திரிபாதி சார்பில் சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி திருநாவுக்கரசு தாக்கல் செய்த மனுவில், குற்றவியல் வழக்குகளில் விசாரணையை சரியாக நடத்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2016 முதல் செப்டம்பர் 15 வரை 304 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்காமல் இருக்க இதுதொடர்பான உத்தரவுகள், சுற்றறிக்கைகளை காவல்துறை முறையாக அமல்படுத்தவேண்டும் என்றார்.