வீரபாகு ஸ்டைலில் ரூ 3 லட்சம் சுருட்டல்... அக்கா - தம்பி சிக்கினர்..! 90 கிட்ஸ் தப்பி ஓட்டம்
போலி முகநூல் கணக்கு மூலம் இளைஞரை காதல் வலையில் வீழ்த்தி, மூன்று லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக, 40 வயதுப் பெண், அவரது கணவர் மற்றும் தம்பி ஆகியோரை திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர். "பேக்கரி டீலிங்" ரியல் வீரபாகு பேமிலி சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
திருச்சியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் முப்பொழுதும் முகநூல் சாட்டிங் மூலம், பெண்களின் புகைப்படங்களாகப் பார்த்து நட்பு அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக செய்துவந்துள்ளார்.
அப்போது திருவாரூரைச் சேர்ந்த அனுசியா என்ற அழகிய பெண் ஒருவரின் புகைப்படத்தை பார்த்து நட்பு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்முனையில் இருந்து நட்பு அழைப்பு ஏற்கப்பட்டதும், அந்தப் பெண்ணின் முகநூலில் குறிப்பிடப்பட்ட செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய பெண், காதல் வசனங்களைப் பேசி இளைஞரைக் கவர்ந்துள்ளார்.
அந்த பெண்ணின் 'கிக்'கான குரலில் சொக்கிப்போன 90-ஸ் கிட்ஸான அந்த இளைஞரோ, தனக்கு திருமணமான தகவலையும் மறைத்துப் பழகியுள்ளார். அந்தப் பெண் அவ்வப்போது அவரிடம் இருந்து மெல்ல பணம் கறக்க ஆரம்பித்துள்ளார். செல்போனிலேயே காதலை வளர்த்த இளைஞரும் அந்த பெண் கேட்டபோதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பி வைத்துள்ளார்.
நாளுக்கு நாள் அந்த பெண்ணின் பேச்சால் கவரப்பட்ட அந்த இளைஞர், தனது முகநூல் காதலி அனுசியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி மேட்டுத் தெருவில் உள்ள அனுசியாவின் வீட்டிற்கு பரிசுப் பொருட்களுடன் நேரடியாகச் சென்றுள்ளார்.
அங்கு சென்றபின் தான் தெரிந்தது, தன்னிடம் இவ்வளவு நாளும் செல்போனில் உருகி மருகிப் பேசியது முகநூல் புகைப்படத்தில் உள்ள இளம்பெண் அனுசியா அல்ல நடுத்தர வயதுப் பெண்ணான அனுசியா என்று...! ஷாக்கான அந்த இளைஞருக்கு, முகநூலில் பதிவிட்டது பக்கத்து வீட்டில் வசிக்கின்ற பருவப்பெண்ணின் படம் என்பது தெரியவந்ததால், அந்த வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதையடுத்து முகநூலில் தனது புகைப்படத்தை தவறாக பதிவிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், நடிகர் வடிவேலுவின் வீரபாகு காமெடி ஸ்டைலில் முகநூல் காதலனிடம் அக்காவைப் பேச வைத்து சொந்த தம்பியே 3 லட்சம் ரூபாய் வசூலித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது..!
இந்த மோசடிக்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததால், பெண்ணின் படத்தை சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக அனுசியா, அவரது கணவர் அய்யப்பன், ரியல் வீரபாகு கவிதன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பக்கத்து வீட்டிலுள்ள இளம்பெண்ணிடம் நட்பாகப் பழகி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை முகநூலில் பதிவிட்டு தவறாகப் பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதேபோல இன்னும் எத்தனை பேர் இவர்களிடம் ஏமாந்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரியல் வீரபாகு பேமிலியிடம், 3 லட்சம் ரூபாயை பறிகொடுத்த அந்த 90ஸ்கிட்ஸோ பணத்தை இழந்த தகவல் வீட்டுக்குத் தெரிந்தால் பெருத்த அவமானமாகிவிடும் என்று போலீசில் புகார் ஏதும் கொடுக்காமல் தப்பி ஓடிவிட்டார்.
மனைவி இருக்க ரகசியமாக முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பெண் தேடினால் ஜோடி கிடைக்கிறதோ இல்லையோ, ஆசைகாட்டி பணத்தை பறிப்பதற்கு மோசடி பேர்வழிகள் போலிக் கணக்குடன் தயாராக இருக்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.