சாதியை காரணம் காட்டி 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ரேஷன் கடை!
ஓமலூர் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை சாதி மோதல் காரணமாக திறக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதுநல்லாகவுண்டம்பட்டி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ரேஷன் மூலம் வழங்கப்படும் பொருட்களை பெறுவதற்கு 4 கி.மீ தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுநல்லாகவுண்டம்பட்டி பகுதியில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்ப்டடதாக கூறப்படுகிறது. இந்த கடையை திறந்தால் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள் என்ற காரணத்தால் அந்த கடையை திறக்க விடாமல் சிலர் தடுப்பதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடையை திறந்து தங்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.