தீபாவளி விடுமுறைக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 2 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்

தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து இரண்டே நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புறப்பட்டுச் சென்றனர். தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சென்றதால் கோயம்பேட்டில் கூட்டம் அலைமோதியது.


 


தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


 


சென்னை, தாம்பரம் மற்றும் மாதாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கடந்த இரு தினங்களில் மட்டும், 4 ஆயிரத்து 800க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.


 


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமமின்றி பயணிக்க முடிந்தது.


 


இருப்பினும், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகளில் தங்களை அனுமதிக்கவில்லை என பெரம்பலூர் செல்லவிருந்த பயணிகள் புகார் தெரிவித்தனர்.


 


அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமின்றி கார்கள் போன்ற சொந்த வாகனங்களிலும், பொதுமக்கள் பயணம் மேற்கொண்டதால் பெருங்குடி போன்ற புறநகர் பகுதிகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.


 


நேற்று இரவு வரை சென்னையில் இருந்து 2 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.