பணம் நகை ஆசை காட்டி மோசடி ரூ. 2.16 லட்சம் கட்டி ஏமாந்தவர் புகார்
வெளிநாட்டிலிருந்து 40 லட்ச ரூபாய் பணம், தங்க நகைகள் தருவதாகக் கூறியதை நம்பி, இணைய வழியில் இரண்டு லட்ச ரூபாய் செலுத்தி ஏமாந்தது குறித்துப் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரைஞானம் பட்டியைச் சேர்ந்த சந்தியாவுக்கு முகநூலில் டோனி மைக்கேல் என்னும் பெயரில் குறுந்தகவல் வந்துள்ளது.
அதில் தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து சந்தியா தனது சகோதரன் ஜோதியின் செல்பேசி எண்ணை டோனி மைக்கேலுக்குக் கொடுத்துள்ளார்.
ஜோதியிடம் செல்பேசியில் பேசிய டோனி 40 லட்ச ரூபாயும் தங்க நகைகளும் அவருக்குப் பார்சலில் அனுப்பி உள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், டெல்லி விமான நிலையச் சுங்கத் துறையில் இருந்து பேசுவதாக ஜோதியிடம் செல்பேசியில் கூறிய ஒருவர், லண்டனில் இருந்து அவருக்குப் பார்சல் வந்துள்ளதாகவும், சுங்கவரியைக் கட்டினால் வீட்டுக்குப் பார்சலை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய ஜோதி இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை, சுங்கத்துறை அதிகாரி எனக் கூறியவர் தெரிவித்த வங்கிக் கணக்கில், செலுத்தியுள்ளார். அதன்பின் அந்தச் செல்பேசியைத் தொடர்புகொள்ள முடியவில்லை.