முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்யாதது ஏன்..காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும், நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில், கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கர்ணணை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7 ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.