வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது....
மதுரை : சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்பதற்கு, பார் கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: புற்றீசல்கள்போல் வெளிமாநிலங்களில் பெருகிவரும் சட்டக் கல்லுாரிகளால், வழக்கறிஞர் தொழிலின் புனிதம் பாதித்துள்ளது. வெளிமாநில சட்டக் கல்லுாரிகளில் நேரடியாக படிக்காமல், உரிய கல்வித் தகுதி இன்றி சட்டப்படிப்பை விலைக்கு வாங்குகின்றனர். அவர்கள் வழக்கறிஞர்களாக வலம் வருகின்றனர்.
தமிழகத்தில் பல வாகனங்களில் வழக்கறிஞருக்குரிய ஸ்டிக்கரை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் போலீசாரிடமிருந்து தப்பிக்க இந்த ஸ்டிக்கரை பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துகின்றனர். சிலசமயங்களில் பலர் சட்டக் கல்லுாரி மாணவர்கள் எனக்கூறிக் கொள்கின்றனர். தமிழகத்தில் சட்டக் கல்லுாரி மாணவர்கள் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
வழக்கறிஞர் ஸ்டிக்கரை தவறான நோக்கில் வாகனங்களில் பயன்படுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு:சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடி மற்றும் போலீசாரிடமிருந்து தப்பிக்க, வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் வழக்கறிஞர் ஸ்டிக்கருக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது, ஸ்டிக்கருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதற்கு பதிலளிக்க இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி நவ.,23 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.