கணவரை இழந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த செக்யூரிட்டி - வீட்டுக்கு அழைத்து அடித்து கொன்ற தாய், மகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கணவரை இழந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்து விபத்தில் இறந்ததாக சித்திரித்த தாய் மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்


மிஸ்டு கால் செய்துவிட்டு, அதன்பின் மறுபடியும் விடாமல் பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பெரியசாமி என்னும் நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அருகே தோலம்பாளையம் ரயில்வே கேட் அருகில், தண்டவாளம் அருகே சாலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த காரமடை போலீசார் அங்கு வந்து விசாரித்தபோது, அந்த நபர், அங்குள்ள தனலட்சுமி என்பவர் வீட்டைத் தேடி வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து தனலட்சுமியையும் அவரது தாய் மல்லிகாவையும் சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைத்து விசாரித்தபோது, தாங்கள்தான் அவரைக் கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட நபர் ரத்தினபுரியைச் சேர்ந்த 50 வயதான பெரியசாமி. 2 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த அவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மடை பெரியார் நகரைச் சேர்ந்தவர் 32 வயதான தனலட்சுமி; கணவரை இழந்த இவர், 50 வயதான தனது தாய் மல்லிகாவுடன் வசித்து வந்தார்.


சமீபத்தில், பெரியசாமி தனது செல்போனில் இருந்து தவறுதலாக தனலட்சுமியின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். தவறான அழைப்பு என தனலட்சுமி துண்டித்த பின்பும், தனலட்சுமியைத் தொடர்ந்து தொடர்புகொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார். மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்மன் கோவிலுக்கு உள்ள அம்மன் கோவிலுக்கு வரும்படி அடிக்கடி அழைத்துள்ளார்.


பெரியசாமியின் தொல்லை தாங்க முடியாத தனலட்சுமி தனது தாய் மல்லிகாவிடம் கூறவே, பெரியசாமிக்குப் பாடம் கற்பிக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திங்கள் இரவு பெரியசாமி மீண்டும் தனலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.


அப்போது பேசிய தனலட்சுமி செவ்வாய் அன்று குறிப்பிட்ட அம்மன் கோவிலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். தனலட்சுமி கிடைத்து விட்டார் என்ற ஆசையோடு செவ்வாய் பிற்பகலில் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் பெரியசாமி. அங்கு அவரைக் காணாததால் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட போது தனது வீட்டு முகவரியைச் சொல்லி அங்கு வரும்படி கூறியுள்ளார் தனலட்சுமி பெரியசாமியும் பெரியார் நகரில் சிலரிடம் முகவரி கேட்டு தனலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனலட்சுமி, அவரது தாய் மல்லிகா மற்றும் உறவினர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார் பெரியசாமி. பின்னர் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஒருகட்டத்தில், அனைவரும் சேர்ந்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாமல் பெரியசாமி உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த தனலட்சுமி உள்ளிட்டோர் அவரது சடலத்தை அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தண்டவாளத்தின் அருகே சாலையோரம் விபத்து நடந்தது போல போட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டனர்.


சிறிது நேரத்தில் தகவல் அறிந்து போலீசார் வரவே அவர்களிடம் நடந்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.தனலட்சுமி மற்றும் மல்லிகா மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு பாடம் கற்பிக்க நினைத்து கொலை செய்த பெண்கள் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)