சென்னைசெஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையில் முறைகேடு சிபிஐ விசாரணைகோரி பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார் மீது விசாரணையை தொடர சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி செஞ்சிலுவை சங்க நிவாகத்துக்கும், தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநரின் துணை செயலாளருக்கும், சிபிஐக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதன் நிர்வாகத்தை கண்காணிக்க நிர்வாகியை நியமிக்க கோரி, அச்சங்கத்தின் துணைத்தலைவர் சங்கர் நாகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை பல கோடி ரூபாய் பணத்தை கையாண்டு வருகிறது. அதன் நிர்வாகி ஒருவர் சங்க நிதியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார்.
சங்க நிர்வாகத்துக்கும், விளம்பரத்துக்கும், பிரசாரத்துக்கும் 70 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. வெறும் 30 சதவீத நிதி மட்டும் சமூக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ரத்த தான முகாம் மூலம் பெறப்படும் ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு பதில் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டுள்ளது. கடந்த 2013 முதல் 2019 வரையிலான ஆண்டு காலத்தில் நடந்த வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது பலமுறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு கிளை தலைவரான ஆளுநரின் பரிந்துரைப்படி சிபிஐக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மனுவுக்கு டிசம்பர் 3ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழக ஆளுநரின் துணைச் செயலாளர், தமிழக அரசு, சிபிஐ ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.