முதிய தி.மு.க தொண்டருடன் டீ ! -சைக்கிள் பயிற்சியில் ஸ்டாலின் உற்சாகம்

 


திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் பயணம் சென்ற போது முதிய தி.மு.க தொண்டருடன் டீ கடையில் அமர்ந்து தேனீர் அருந்தினார்.


 


தி.மு. க தலைவர் ஸ்டாலின் வாரத்தில் 3 நாள்கள் காலையில் சைக்கிளில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . இன்று காலை கோவளத்தில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், புதிய கல்பாக்கம், திருவிடந்தை வட நெம்மேலி, நெம்மேலி, முதலைப்பண்ணை வரை சைக்கிளில் சென்று மீண்டும் கோவளம் திரும்பினார். ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.


 


கோவளத்தில் ஸ்டாலின் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது, அங்கே வாக்கிங் சென்று கொண்டிருந்த சிக்கந்தர் பாய் என்பவரை பார்த்தார். பிறகு, அவரை அருகே அழைத்த ஸ்டாலின் நலம் விசாரித்தார். கடந்த 1962 - ஆம் ஆண்டு முதல் தி.மு.க தொண்டராக உள்ள சிக்கந்தர் பாய் கோவளம் மீனவர் குப்பம் தலைவர் ஆவார். சிக்கந்தர்பாய் சில நாள்களாக உடல் நலம் சரியில்லாமலிருந்தார். இதனால், ஸ்டாலின் அவரை கூப்பிட்டு நலம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. பிறகு, அவருடன் அமர்ந்து ஸ்டாலின் தேநீர் அருந்தினார். 


 


கடந்த 2001 -ஆம் ஆணடு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சிக்கந்தர் பாய் கோவளம் ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.