திங்கள் முதல் புறநகர் ரயில் சேவை இன்றியமையாப் பணியாளர்களுக்கு மட்டும்

இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்காகத் திங்கட்கிழமை முதல் சென்னையில் மூன்று தடங்களில் புறநகர் ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


அரசால் சான்றளிக்கப்படும் இன்றியமையாச் சேவைப் பணியாளர்களின் வசதிக்காகத் திருமால்பூர் - செங்கல்பட்டு - சென்னைக் கடற்கரை, காட்பாடி - அரக்கோணம் - சென்னை சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி - சென்னைக் கடற்கரை ஆகிய தடங்களில் புறநகர் ரயில்களை இயக்கும்படி தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.


அதன்படி வரும் திங்கட்கிழமை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்குச் சான்றளிக்கும் அதிகாரியாகப் பொதுத்துறைத் துணைச் செயலாளர் சாந்தியைத் தமிழக அரசு நியமித்துள்ளது.


சான்று பெற்ற இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்கு மட்டும் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.