பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்..! முடிவுக்கு வந்த மூன்றரை ஆண்டு கைவரிசை

திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்த போலீசார் அவனிடமிருந்து 65 பவுன் தங்கநகை, 3 கிலோ வெள்ளி, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். காருக்கு மாத தவணை கட்டுவதற்காகத் திருடத் தொடங்கியவன் மூன்றரை ஆண்டுகளாக திருடி புதிய கார் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


 


சென்னையை அடுத்த குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து குன்றத்தூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பம்மல் கவுல்பஜாரை சேர்ந்த பாலாஜியை பிடித்து விசாரித்தனர்.


 


கார் ஓட்டுநரான பாலாஜி, தனது காருக்கு மாதத்தவணை செலுத்துவதற்காக திருடத் தொடங்கியவன், பணத்தேவை இருக்கும் போதெல்லாம் கைவரிசை காட்டியுள்ளான். இதற்காக பூட்டி இருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டம் விடுவதும், இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று லுங்கி மற்றும் பனியன் அணிந்து திருடியதும் தெரியவந்துள்ளது.


 


கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதே போல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவன் கொள்ளையடித்த பணத்தில் புதிதாக ஒரு காரும் வாங்கியுள்ளான். இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார் 65 சவரன் தங்கநகைகள், 3 கிலோ வெள்ளி, கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.