சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கியபோதும் ஒகேனக்கல் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தொழிலாளிகள் தவிப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் 7 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக் கப்பட்டபோதும் படிப்படியாகவே இயல்புநிலை திரும்பி வருகிறது.


கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. அப்போது முதல் தருமபுரி மாவட்ட சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. சில மாதங்களுக்கு பின்னர் ஊரடங்கு விதிகளில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட தமிழக சுற்றுலா தலங்களிலும் பல்வேறு நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


 


ஆனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனவே, ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பி வாழ்ந்த பரிசல் ஓட்டுநர்கள், மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழந்து தவிப்பதாகவும், நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.


 


இந்நிலையில் கடந்த 22-ம் தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல, பரிசல் இயக்கவும், மசாஜ், சமையல் பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.


 


பேருந்துகள் இயக்கம் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், ஒகேனக்கல்லில் வழக்கமான இயல்பு நிலை உடனடியாக திரும்பவில்லை. கரோனா தொற்று பரவும் சூழல் இன்னும் தொடர்வதாலும், அதுபற்றிய அச்சமும் பொதுமக்கள் மத்தியில் நிலவுவதாலும் ஒகேனக்கல்லுக்கு குறைந்த அளவிலான மக்களே வருகை தரத் தொடங்கி உள்ளனர்.


 


அதேநேரம், அடுத்தடுத்த நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஒகேனக்கல் பகுதியில் கடைக்காரர்கள் கடை அமைத்து வருகின்றனர். 7 மாதங்களாக கிடப்பில் கிடந்த மீன்பிடி வலையை தொழிலாளர்கள் சிக்கெடுத்து தயார் செய்யத் தொடங்கியுள்ளனர்.


 


சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் படிப்படியாகவே இயல்பு நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது. இந்த மந்த நிலை அடுத்து வரும் வாரங்களில் மாறும் என ஒகேனக்கல் தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)