கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தலையில் சத்தியம் செய்தார்.. ரஜினி அவரது குருவிடம் பேசியது பற்றி பி.ஆர்.பாண்டியன் தகவல்

நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன், கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தன் தலையிலும் தன் மனைவி தலையிலும் ரஜினிகாந்த் சத்தியம் செய்து கொடுத்ததாக அவரின் குரு கோபாலி கூறியதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக காவிரி போராட்டம் பற்றி எரிகிறபோது ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்க தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அவரே அதற்கான அறிக்கையைக் கொடுத்து உறுதி செய்தார். அந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். ரஜினி தமிழக முதல்வராக நான் வருவேன் அரசியல் கட்சித் தூங்குவேன் என்று அறிவிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம். இதனை அனுமதிக்க மாட்டோம் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தோம்.


அந்த நிலையில் ரஜினியின் குரு கோபாலி (வயது 95) என்பவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து தங்களுடைய (பி.ஆர்.பாண்டியன்) அறிக்கைகளை எல்லாம் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். கடந்த வாரம் என்னை ரஜினிகாந்த் என் வீட்டில் வந்து ஒரு நாள் பகல் முழுமையிலும் தங்கியிருந்து என்னோடு இரண்டு வேளை உணவு அருந்திவிட்டு நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன். கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என என் தலையிலும் என் மனைவி தலையிலும் சத்தியம் செய்து கொடுத்து உள்ளான். அவன் அரசியலில் ஈடுபட மாட்டான் என்று உறுதி செய்துள்ளான். உனக்கு அரசியல் தேவையில்லை உடல் நலம்தான் முக்கியம் என ஆலோசனை சொல்லி அனுப்பியுள்ளேன் என்றார்.


எனவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். நீங்கள் அதுகுறித்து அறிக்கைகள் விடவேண்டிய அவசியமில்லை. அவர் அரசியலை விரும்பவில்லை. எனவே நான் அவன் சார்பில் உங்களுக்கு உத்தரவாதமாக சொல்கிறேன். அவன் கட்சி ஆரம்பிக்க மாட்டான் என்று சொன்னார். அவர் மனைவியும் அதை முழுமையாக உடனிருந்து ஆமோதித்தார். இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.


அதன்பிறகு நான் ரஜினி குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் இருந்த நிலையில், இன்றைய தினம் ரஜினியின் சகோதரர் அதனை அறிக்கையாக வெளியிட்டு கொடிய தொற்று நோய் காலத்தில் கட்சி தொடங்க முடியாத நிலையில் உள்ளதாகச் சொல்லி உறுதிப்படுத்தி இருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி ஆகும்.


எனவே அவர் கட்சி தொடங்குவார் என்று அவருடைய ரசிகர்கள் ஏமாற வேண்டாம். ரசிகர் மன்றங்கள் என்பது வேறு. அரசியல் கட்சி துவங்குவது என்பது வேறு. எனவே அரசியல் கட்சிகள் என்பது மக்களுக்கான போராட்டக்களத்தில் தொடர்ந்து பங்களிப்பு செய்து மக்கள் நம்பிக்கையை பெற்று அரசியல் கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படுவதுதான் பொருத்தமான ஒன்றே தவிர நடிப்பிற்காக அதனை ஆதரிக்கும் ரசிகர்கள் கூட்டம் அரசியல் கட்சிக்கு ஆதரிக்கும் என்கிற நிலை தமிழகத்தில் எடுபடாது என்பதை ரஜினி உணர்ந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் முடிவு மிகச் சிறப்பானது. அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)